Thursday, April 26, 2018

உயிர்

ஆசைஆசையாய் வளர்த்த கோழியைப் பூனை கவ்விச் சென்று விட்டது. ஓடிச் சென்று விரட்டுவதற்குள் அந்த மாமிசப் பக்ஷணி தனித முழு வலிமையும் காட்டி அபய ஓலமிட்ட அந்த கோழியைத் தரதரவென கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றது. கதவிடுக்கில் நுழைந்து செல்லும் அதன் துரித செயலுக்கு, பெரிய பூட்டின் திறவுகோல் தேடித் திறந்து ஓடும் எங்களால் ஈடு கொடுக்க இயலவில்லை. குற்றயிரும் குலையுயிரமாய் கிடந்த ஜீவன் கண் முன்னே துடிதுடித்துச் செத்தது.
அறியாச் சோகம் தொண்டையை அடைத்து நெஞ்செங்கும் பரவி அடிவயிறு வரை ஆட்கொண்டு விட்டது.
இடைவிடாப் பெருமழையில் நனைந்து இறகுகள் ஒட்டிக் கொண்டு பறக்க முடியாமல் நிற்கதியாய் நின்றதால் தான் இந்த கோர நிலைக்கு ஆளானது என்னும் உண்மை புரிந்தது. வெளியூருக்குச் சென்ற களைப்பில் கவனியாமல் விட்டோமே என அன்னையும் சிற்றன்னையும் மாற்றி மாற்றி புலம்பித் தீர்த்தார்கள். பிய்த்து எரியப்பட்ட இறகுகள் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. கோழியைப் புதைக்கத் தயாரானோம். ஹஅரி பாட்டர் டோபிக்குச் செய்தது போல், மனதின் கனத்தை கைகளுக்கும் கால்களுக்கும் மாற்றி, முடிந்த அளவு ஆழமாய்தக் குழி ஒன்றைத் தோண்டினோம். சில்லிட்டு இறுகியிருந்த கோழியின் பூதவுடலை அதில் வைத்து மூடினோம். கூர்ந்த முகரும் சக்தியுடைய, இறந்த மாமிசத்தையும் துரத்துபவைகளிடமிருந்து காப்பாற்ற ஓடுகள் அடுக்கிச் சமாதி செய்தோம். முன்னெச்சரிக்கை இன்றி வெகு நேரம் உழைப்பதற்கு உடல் ஒத்துக் கொள்ள மறுத்தது. மனச்சோர்வும் சேர்ந்து கொண்டதில் கைகால்கள் கிடுகிடுவென்று நடுங்கின. எனினும், ஒருவேளை என்னிடம் மந்திரக்கோல் இருந்திருந்தால் கூட அதைப் பயன்படுத்தி இருக்க மாட்டேன். இந்த உழைப்பே, எங்களுக்காய்ப் பல நன்மைகள் செய்திட்ட அப்பிராணிக்கு நாங்கள் செய்யும் சமர்ப்பணம்.
உணவுச் சங்கிலியில் இடையூறு செய்து அப்பூனையின் உணவையும் பிடுங்கிக் கொண்டதற்காய் இயற்கையே எங்களை மன்னிப்பாயாக. பூனையே நீயும் தான். உனது இரையைப் பூமித்தாயிடம் சமர்ப்பித்து விட்டோம்.
இவ்வளவு நேரமும் சலனமின்றிப் படுத்திருந்த சேவல் ஏதோ உணர்ந்தார்ப்போல் அந்த நடுநிசி வேளையில் எழுந்து கூவியது. கூவிக் கொண்டே இருந்தது, பெட்டையின் எதிர்குரல் இனி என்றுமே கேட்காது என்பதை அறியாமல்.. நல்ல வேளையாக இயற்கை பெரியதொரு மூளையினை அதற்கு அளிக்கவில்லை.மீதி உணவைத் தொடர்ந்து சாப்பிட மனமில்லாமல் அப்படியே கைவிட்டு படுக்கைக்குச் சென்றோம்.
உறக்கம் ஏனோ வர மறுத்தது.

பி.கு: கோழி இறந்தததற்கு இவ்வளவு நீளக் கதையா என்று வியக்கலாம் அதை வளர்த்தறியாதவர்கள். நம்மூடே உலவித் திரிந்த ஓர் உயிருக்காய் வருந்துவது மனித இயல்பன்றோ.!

No comments:

Post a Comment