Thursday, April 26, 2018

தேடல்

கலாச்சார சீர்கேடு என்று தொண்டை கிழிய கத்துபவர்களே.!
எப்படிப்பட்டது உங்கள் கலாச்சாரம் என்பதை சற்று உற்று நோக்குங்கள். மனித இனத்தை எவ்வாறெல்லாம் கூறு போட முடியும் என்று பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மந்திராலோசனை செய்து, மூலக்கூறுகளைப் பல வாறாகப் பிரித்து, பின் பிரிக்கவே முடியாதென எண்ணிய அணுவையும் பிரித்த அதிமேதாவி விஞ்ஞானிகளை விடவும் அதிகமாய் வெற்றி கண்டு விட்டீர்கள்.
சகமனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் அன்பு செலுத்துவதே முதல் கடமை என்ற பழங்கால தர்மங்களை எல்லாம் நீங்கள் மறந்து பல நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது நீங்கள் கலச்சாரம் என்று கட்டிக் கொண்டழுவதெல்லாம்,உருவாக்கப்பட்ட காரணம் அறியாமல் எந்த கேள்வியும் எழுப்பப்படாமல் குருட்டுத்தனமாக பின்பற்றப் பட்டு பல வாறாக திரிந்து போய் கடைசியில் எதற்குமே பயன்படாதிருக்கும் வெற்றுச் சடங்குகளைத்தான்.
மேலை நாட்டுக் கலாச்சாரத்தை முழு மூச்சுடன் எதிர்ப்பவர்கள், தங்கள் அறிவை, வழக்கத்துக்கு அதிகமாக சற்று பயன்படுத்தினாலே அதன் நன்மை தீமைகள் வெகுவாகப் புலப்படும். நாம் காற்றில் பறக்க விட்ட அந்தப் பழங்கால தர்மம் இப்போது இடம் பெயர்ந்து அவ்விடம் தழைத்தோங்கத் துவங்கியிருக்கிறது. தேவையற்றதை மிகைப்படுத்தாமல் எதார்த்தைச் சாரும் எந்த கொள்கையும் நமக்குப் பிடிப்பதில்லை. பார்க்க பளபளவென்று, நம் தேவைக்கெல்லாம் வளைந்து நெளிந்து உருவமற்றுப் போகும் பிம்பங்களைத்தான் ஆராதிக்கின்றோம்.
சரி,தவறு என்பது காலத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது.
காலத்திற்கேற்ப மாற்றம் வரவில்லையெனில் சரியும் தவறும் பொய்யும் மெய்யும் எவருமறியாமல் தாமாகவே இடம் மாறிக் கொள்ளும். இந்த நிதர்சனங்களை உணராதவர்கள் தான், அடுத்தவர்களிடம் பிழை கண்டுபிடிப்பதிலேயே ஆயுளைச் செலவழித்துக் கழிக்கின்றனர்.
சமுதாயச் சிறைக்குள் சிக்கி சிறகுகளை, அலங்காரப் பொருட்களாக அணிந்து பெருமையடித்து திரிகின்றனர்.
மதம், இனம், மொழி, நாடு, ஏன், பூமியைக் கூட நான் எனக்கொரு அடையாளமாகக் காட்ட விரும்பவில்லை. நான் பிரம்பஞ்சத்தின் ஒரு பகுதி. முடிவில்லாமையில் தோன்றி முடிவில்லாமையில் கலப்பதற்கு இடையில் மனித உருவில் உலவித் திரியும் ஒரு பிர(ய)ாணி.
மனித உடல் கொண்டு, பசிக்கு உணவருந்தி, மூளை செயல்பாடும் இருப்பதால், அதன் ரசாயணச்செரிவுகளால் ஏற்படும் உணர்ச்சித் ததும்பல்களுக்கு நானும் உள்ளாகிறேன். எனினும், உயிரின் தேடல் மட்டும் இன்னும் ஓயவில்லை.
எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்த விளங்காப் பதிவாகவே இது அமையலாம். திருத்தி அமைக்கப்படாத எனது எண்ண ஓட்டங்களே இவை. இதை உலகிற்கு அறிவித்து பிறரது பொன்னான காலத்தை வீண் விரயம் செய்ய நான் விரும்பவில்லை.
இது எனக்கான என்னுடைய பதிவு.

நாணயம்

"ச்ச்சச.. நேரமே சரியில்ல" முனகியவாறே தனது முழு கோபத்தையும் இரு சக்கர வாகனத்தின் மேல் காட்டி அதை உதைத்துக் கொண்டிருந்தான் ராகவ். "சாப்பிட்டுட்டு போப்பா" என்ற அம்மாவின் குரலைக் கேளாதது போல் வந்தது தவறோ என தோன்றியது. காலம் தவறிச் சென்றால் ஏற்படும் விளைவுகளும் மேலாளரின் சிவந்த முகமும் கண் முன் வந்து போயின.
அரை மனதோடு விரைவாகப் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான். "இந்த பஸ் எப்பவாச்சும் டைமுக்கு வருதா? இங்க வந்து பத்து நிமிஷத்துக்கு மேல ஆச்சே" பேருந்து நிலையத்தில் நின்றரியாத அவனுக்குக் கோபம் வலுத்தது. "மழை வரும் போல இருக்குது" அருகிலிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். அன்னார்ந்து பார்த்தான். கரு மேகங்கள் சூல் கொண்டது போல் சூழ்ந்து கொண்டிருந்தன.இதற்கு மேல் காத்திருப்பதில் பயனில்லை ஆட்டோவில் சென்று விடலாம் என எண்ணி முடிப்பதற்குள் வெகு தூரத்தில் பேருந்தின் முகப்பு தெரிந்தது. " நல்லதாப் போச்சு" பெருமுச்சு விட்டான்.
"தம்பி.." தன்னைத் தான் அழைக்கிறார்களா என உறுதி செய்து கொள்ளத் திரும்பினான்.
அங்கே எண்பது வயது மதிக்கத்தக்கப் பெரியவர் நின்று கொண்டிருந்தார். சவரம் செய்யப்படாத தாடியும் சடை முடியும் பிய்ந்த செருப்பும் அழுக்கு வேட்டியும் தரித்தவராய் கையில் தடியுடன் நின்று கொண்டிருந்த அவரைக் கண்டதும் ஏன்டா திரும்பினோம் என்று மனதிற்குள் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
"இந்தப் பிச்சக்காரங்களுக்கு நேரம் காலமே கிடையாது. உங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடைக்கலியா?"
"தம்பி அது வந்து.."
"எங்கே இருந்து தான் இப்டி உயிர எடுக்க வர்றீங்களோ?" பேருந்து நெருங்கிக் கொண்டிருந்ததை கவனித்தவன் "சரி எதாவது கொடுக்கலான்னா இங்க இருந்து நகர மாட்டான்" என எண்ணியவாறே தனது காலங்கிப் பைக்குள் விரல்களை நுழைத்தான். குளிர்ந்த காற்று வீசியது. அவனது நெற்றியில் வியர்வைத் துளிகள் எட்டிப் பார்த்தன. அதிர்ச்சியில் உறைந்தவனாய்,
வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து இங்கே வந்த வரையில் நடந்தவற்றை நொடிப்பொழுதில் மறுஓட்டம் செய்து பார்த்தான். "எங்கே..."
"தம்பி நீங்க போற அவசரத்துல இத கீழ போட்டுட்டீங்க. குரல் கொடுக்கிறதுக்குள்ள வேகமா நடந்து போய்ட்டீங்க. என் செருப்பு பிஞ்சு போச்சு. அத சரி பன்னிட்டு நடந்து வர கொஞ்சம் நேரமாயிடிச்சு.முன்ன மாதிரி எங்க வேகமாக நடக்க முடியுது.? மன்னிச்சிக்கிடுங்க தம்பி" பணப்பையை அவனிடம் நீட்டினார். அவசரமாக அதை வாங்கி திறந்து பார்த்தான். உள்ளே ஐந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் ஒரே ஒரு ரூபாய் நாணயமும் அவன் வைத்தது போல் அப்படியே இருந்தன. நிம்மதி அவன் நெஞ்செங்கும் பரவியது. புன்முறுவல் இதழோரம் மலர்ந்தது.
"நன்.....றி" அவன் நிமிர்வதற்குள் பிய்ந்த செருப்புடன் போராடியபடி, தடியை ஊன்றிக் கொண்டே தள்ளாடி நடந்து சென்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.. நிலையத்தை அடைந்த பேருந்து, கீறிச்சிட்டு நின்றது. பணப்பையை மடித்து கவனமாக சட்டைப்பைக்குள் வைத்தான் ராகவ். அந்த ஒரு ரூபாய் நாணயம் முன்பை விட அதிகமாக கனத்தது. முதல் மழைத்துளி அவன் கன்னத்தில் விழுந்தது.

ஒரு கதையின் கதை

புற்றீசல்களாய் முளைத்திட்ட எழுத்தாளர்களில் நானும் ஒருவள்.ஒரு சிறிய நிகழ்வை எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் கற்பனை செய்து அதையே மையமாக வைத்து என்னிடத்தில் சிக்கும் அப்பாவி ஜீவன்களுடன் சண்டையும் போட்டு விடுவேன் நான்.இந்த கற்பனாசக்தியே எனக்கு நம்பிக்கை ஊற்றிற்று.என்னை எழுதவும் வைத்திற்று.
சரி எழுதுவது என்றாகி விட்டால் கரு என்று ஏதாவது வேண்டுமே.சிந்தனை குதிரை சீறிப் பாய்ந்தது.அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை விட சிறந்த ஒன்று எங்கே இருந்து விடப் போகிறது? தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் இதற்கொரு நல்ல உதாரணம்.
எனக்குத் தெரிந்த என்னைக் கவர்ந்த சிலரின் வாழ்வை மையப் படுத்தி கதை எழுதி தான் பார்ப்போமே என்ற எண்ணம் வலுப்பட்டது.
கரு கிடைத்து விட்டது. அடுத்த பெரிய குழப்பம், மொழி. தற்போதுள்ள பல இந்திய எழுத்தாளர்களைப் போலவே நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டி விடலாம் என்று தான் முதலில் எண்ணினேன். யோசித்துப் பார்க்கையில் வார்த்தைகள் வசப்பட வில்லை. தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் போல் தகதிமி ஆடி எங்கோ சென்று முட்டிக் கொண்டு நின்றது. அதை அப்படியே விட்டு விட்டு என் இனிய தமிழிடம் சரணாகதி அடைந்து கொண்டேன். இவ்வாறாக கதை எழுத வேண்டும் என்ற எனது ஆசை மற்றும் கனவு ஒரு வழியாய் முழு உருவம் பெறத் தொடங்கிற்று.
இதைப் படித்து விட்டு "எங்கே கதை? எங்கே கதை?" என்று முந்தி அடித்துக் கொண்டு வருபவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.
தலைப்பைப் படியுங்கள்.

தங்கப்பாதை

உலகில் இரு வகை மனிதர்கள் உள்ளனர்.. ஒன்று, மூளைச் சலவை செய்பவர்கள் மற்றொன்று, செய்யப் படுபவர்கள்.

உலக மக்கள் சரி, தவறு என்பதை எவ்வாறு பிரித்தறிரிகிறார்கள் என்ற லாஜிக்(logic)ஐ எடுத்துக்காட்ட தங்கத்தின் துணை நாடுகிறேன்.திசையற்ற எனது எண்ண ஓட்டங்களுடன் பயணிக்க இசைந்ததற்காய், தங்கமே உனக்கு நன்றி.

தங்கம் இயல்பாக குவார்ட்ஸ்(quartz) கற்களோடு இழைந்து நெளிந்து வளைந்து பிணைந்து, நதிப்படுகையில் வாழ்கின்றது.(ஆம், அதை உயிர் மற்றும் உணர்வுள்ள பிராணியாக நாம் உருவகம் செய்து கொள்வோம்) மூளைச் சலவை செய்யும் மெத்தப் படித்த, முற்றும் உணர்ந்த மேதாவிகள், தங்கத்திடம் சென்று, "இதென்ன, நீ யாருக்கும் பயன்படாமல் இப்படி அர்த்தமற்ற வாழ்வு வாழ்கின்றாயே. இதனால் என்ன பயன்? நீ தீப்பிழம்புக்குள் சென்று அக்னி ஜூவாலையில் உருகி, கம்பியாய் திரண்டு, சுத்தியால் அடிபட்டு தகடாய் விரிந்து, கொல்லரின் கை சேர்ந்து அணுஅணுவாய் செதுக்கப்பட்டு நுனுக்கமாய் வேலைபாடுகள் பெற்று ஆபரணமாய் மாறியபின், மேலான ஒருவரின் அங்கத்தை அலங்கரித்து, அதனால் அவர் அடையும் பூரிப்பை கண்டுணர்ந்த பின் அல்லவா உனக்கு கதி மோட்சம் கிட்டும். இந்த மேலான வாழ்வை விட்டு விட்டு, இவ்வாறு அற்பமாய் இருப்பது முறையா?" எனறொரு கேள்வி எழுப்புவர். இதற்கு தங்கம், "அட ஆமா.. இது தெரியாம இவ்ளோ நாள் ஆயுச கழிச்சிட்டேனே.! இதோ இப்பவே நகையா மாறிடுறேன்" என்று சிலாகித்துக் கொண்டு கிளம்பினால் அதற்கு கிடைக்கும் பெயர், "நல்ல தங்கம்"
இவ்வாறு கூறாமல், "இது தான் எனது இயல்பு. நான் நதியுடனே மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நகையாய் மாற விருப்பமில்லை" என மறுத்து விட்டால், அதற்குப் பெயர் தான், "கெட்ட தங்கம்".
நல்ல தங்கம் என்று பெயர் பெற்றவை எல்லாம் உடனே கூடி, மிச்சம் இருப்பவற்றை பார்த்து "கெட்ட தங்கம் ஒரு சோம்பேறி, கல்லா இருக்கிற தாழ்ந்த பிறவி. நாங்க தான் உசத்தி. மனுஷங்க எங்கள எவ்ளோ புகழ்றாங்க தெரியுமா?" என்று தங்களது அருமை பெருமைகளை எடுத்துரைத்து, தங்கள் கூட்டத்தை விரிவு படுத்திக் கொள்ளும்.
கெட்ட தங்கமோ, இதை ஒன்றுமே சட்டை செய்யாமல், மல்லார்ந்து படுத்துக் கொண்டு சூரிய குளியல் எடுத்துக் கொண்டிருக்கும்.
இக்கதையை மூன்றாமவர் பார்வையிலிருந்து நடுநிலைமையாய் ஒரு நோட்டமிடலாம், 'நல்ல கெட்ட' 'உயர் தாழ்', என்ற வார்த்தைகளை எல்லாம் களைந்து விட்டு.

கல்லாய் இருந்த போதும் நகையாய் மின்னிய போதும் தங்கத்திற்கு இறுதியாக கிடைத்தது என்னவோ, "களிப்பு/உவகை/மகிழ்ச்சி" என்னும் மனநிலயே.
கூடுதலாக, முதலாவது பதிலளித்த பெரிய தங்க கூட்டத்திற்கு, "நான் பெரியவன். இக்கூட்டத்தில் சேராதவர்கள் கீழானவர்கள்" என்று எண்ண வைக்கும், "பெருமை/கர்வம்/ஆணவம்" என்ற உணர்வு கிடைக்கப்பெற்றது.
இதில் மிகப் பெரிய இலாபம் பெற்றது யார் என ஊகிக்க முடிகிறதா? சந்தேகத்திற்கு இடமின்றி, மூளைச் சலவை மேதாவி தான்.
"இது தான் உனக்குச் சிறந்தது, இவ்வாறு செய்தால் நீ பெரியவன், உனக்கு மதிப்பு அதிகம்" என்று தங்கத்தை நம்ப வைத்து ஏமாற்றியது தான் அவரது திறமை. அதன் பரிசு தான், எல்லா இன்னல்களையும் தாண்டி ஆபரணமாய் வெளி வந்த தங்கத்தை, லாவகமாய் கழுத்தில் மாட்டிக் கொள்வது. 'ஏமாற்றியது' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கும் காரணம் உண்டு. தங்கம் நகையாய் செம்புடன் கலந்த பின், அதன் மதிப்பு மனிதர்களிடையே உண்மையில் குறைந்து தான் போய்விடுகிறது. வெளியே "நல்ல தங்கத்தை" புகழும் அவர்கள், மறைவாய், "கெட்ட தங்கமாய்" பெயர் பெற்ற "தூய" தங்கத்தையே நாடுகின்றனர்.

நல்ல தங்கமாவதா? கெட்ட தங்கமாவதா? இந்த பெரிய முடிவை தங்கத்திடமே விட்டு விடுகிறேன்.

இதில் பல கிளைக் கதைகளும், வாதவிவாதங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும், நேரம் மற்றும் பொறுமை ஆகிய முக்கிய வஸ்துகளின் தட்டுப்பாடு இருப்பதால், இக்கதை இவ்விடமே முற்று பெறுகின்றது.

முற்றும்

உயிர்

ஆசைஆசையாய் வளர்த்த கோழியைப் பூனை கவ்விச் சென்று விட்டது. ஓடிச் சென்று விரட்டுவதற்குள் அந்த மாமிசப் பக்ஷணி தனித முழு வலிமையும் காட்டி அபய ஓலமிட்ட அந்த கோழியைத் தரதரவென கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றது. கதவிடுக்கில் நுழைந்து செல்லும் அதன் துரித செயலுக்கு, பெரிய பூட்டின் திறவுகோல் தேடித் திறந்து ஓடும் எங்களால் ஈடு கொடுக்க இயலவில்லை. குற்றயிரும் குலையுயிரமாய் கிடந்த ஜீவன் கண் முன்னே துடிதுடித்துச் செத்தது.
அறியாச் சோகம் தொண்டையை அடைத்து நெஞ்செங்கும் பரவி அடிவயிறு வரை ஆட்கொண்டு விட்டது.
இடைவிடாப் பெருமழையில் நனைந்து இறகுகள் ஒட்டிக் கொண்டு பறக்க முடியாமல் நிற்கதியாய் நின்றதால் தான் இந்த கோர நிலைக்கு ஆளானது என்னும் உண்மை புரிந்தது. வெளியூருக்குச் சென்ற களைப்பில் கவனியாமல் விட்டோமே என அன்னையும் சிற்றன்னையும் மாற்றி மாற்றி புலம்பித் தீர்த்தார்கள். பிய்த்து எரியப்பட்ட இறகுகள் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. கோழியைப் புதைக்கத் தயாரானோம். ஹஅரி பாட்டர் டோபிக்குச் செய்தது போல், மனதின் கனத்தை கைகளுக்கும் கால்களுக்கும் மாற்றி, முடிந்த அளவு ஆழமாய்தக் குழி ஒன்றைத் தோண்டினோம். சில்லிட்டு இறுகியிருந்த கோழியின் பூதவுடலை அதில் வைத்து மூடினோம். கூர்ந்த முகரும் சக்தியுடைய, இறந்த மாமிசத்தையும் துரத்துபவைகளிடமிருந்து காப்பாற்ற ஓடுகள் அடுக்கிச் சமாதி செய்தோம். முன்னெச்சரிக்கை இன்றி வெகு நேரம் உழைப்பதற்கு உடல் ஒத்துக் கொள்ள மறுத்தது. மனச்சோர்வும் சேர்ந்து கொண்டதில் கைகால்கள் கிடுகிடுவென்று நடுங்கின. எனினும், ஒருவேளை என்னிடம் மந்திரக்கோல் இருந்திருந்தால் கூட அதைப் பயன்படுத்தி இருக்க மாட்டேன். இந்த உழைப்பே, எங்களுக்காய்ப் பல நன்மைகள் செய்திட்ட அப்பிராணிக்கு நாங்கள் செய்யும் சமர்ப்பணம்.
உணவுச் சங்கிலியில் இடையூறு செய்து அப்பூனையின் உணவையும் பிடுங்கிக் கொண்டதற்காய் இயற்கையே எங்களை மன்னிப்பாயாக. பூனையே நீயும் தான். உனது இரையைப் பூமித்தாயிடம் சமர்ப்பித்து விட்டோம்.
இவ்வளவு நேரமும் சலனமின்றிப் படுத்திருந்த சேவல் ஏதோ உணர்ந்தார்ப்போல் அந்த நடுநிசி வேளையில் எழுந்து கூவியது. கூவிக் கொண்டே இருந்தது, பெட்டையின் எதிர்குரல் இனி என்றுமே கேட்காது என்பதை அறியாமல்.. நல்ல வேளையாக இயற்கை பெரியதொரு மூளையினை அதற்கு அளிக்கவில்லை.மீதி உணவைத் தொடர்ந்து சாப்பிட மனமில்லாமல் அப்படியே கைவிட்டு படுக்கைக்குச் சென்றோம்.
உறக்கம் ஏனோ வர மறுத்தது.

பி.கு: கோழி இறந்தததற்கு இவ்வளவு நீளக் கதையா என்று வியக்கலாம் அதை வளர்த்தறியாதவர்கள். நம்மூடே உலவித் திரிந்த ஓர் உயிருக்காய் வருந்துவது மனித இயல்பன்றோ.!

Little things

We never know when help would arrive at our doorstep. Sometimes in the least expected of times. I have been feeling quite low myself lately due to multiple trying situations. The fact that I'm able to bring out the strength to write this up itself seems a bit surprising to me.

My day started as gloomy as any other. But I always try my best to put up a calm facade for the benefit of others. And this client of mine,(I'd rather use this term instead of the 'patient' label yet keeping it professional) started talking to me like she always did. I was patiently replying to every single question of hers even though she had been repeating almost the same set of questions in different ways. I kept answering differently each time. This had become our small routine for the past week. All of a sudden, with a sad face, she apologized for swearing at me few days back. As doctors, we never take it to heart all the abuse thrown at us, as we understand their distress. However this genuine little gesture from her side, kindled something in me. It may not be a big thing. But it's a little thing  that made my day. What amazed me the most was the ease with which she was able to forgive herself and communicate her mind truly. She may return back to swearing me again but I'm sure this moment is what I'll hold to my heart.

Yes, my client helped me to smile (for real) today and I'm ever so grateful for her.
(For my medico frnz, this is transference but I believe it's well WNL)

Though life seems chaotic and complicated, it's simple things like these that keep us going and clear our vision for a broader view..

They motivate us to keep spreading hope and bring some sparkle to someone else's day, no matter how tiny.

Monday, April 16, 2018

Interstellar - the movie

Before I begin with anything else,  first thing I feel is "should have watched in imax"

after hearing it so many times from the endless reviews, u need to know science to understand the movie, I went through some articles. . due to limited time, I got to see only about the "blight" or "the dust" destroying the crops.. & it helped to understand the initial scenes..

தமிழ்லே எழிதிடலாம்னு தோனுது.
என் பல விதமான எண்ண ஓட்டங்கள், கேள்விகள், முக்கியமா, ஏன் இப்டி எல்லாம் இருக்க கூடாதுங்கிர கற்பனைகள்.. எல்லாத்துக்கும் உருவம் குடுத்து அத கண் முன்னாடி நடக்க விட்ட மாதிரி இருக்கு.
ஸ்டீபன் ஹாக்கிங் புத்தகத்தை படிக்க தேவையான உத்வேகம் கெடச்சிருக்கு.
கருங்குழிக்குள் செல்லவே பயப்பட்ற போது, அத விட்டு வெளியே வர்றது போன்ற கதையோட்டம் பிரம்மிக்க வச்சது.
பல விஷயங்கள், இப்டி நெஜமாவே இருந்தால் நல்லா இருக்குமேன்னு தோண வைக்கும். இது கண்டிப்பா அதுல ஒன்னா இருக்கும்.

"Save the world save the world" ன்னு சொல்ற இந்த அமெரிக்க படங்களின் லாஜிக் எனக்கு விளங்கவே இல்ல. அப்டியே  உலகத்த காப்பாத்தி வேறு கிரகம், வேற அண்டத்துக்கே கூட்டிட்டு போனாலும் எப்டி எல்லாருமே வெள்ளையர்களா இருக்காங்க?!

அறிவியல் பூர்வமா இந்த படத்த எவ்ளோ தூரம் நான் கிரகிச்சிக்கட்டேன்னு தெரியாது. ஆனா தத்துவங்களும் எண்ண ஓட்டங்களும் மேலும் சிந்திக்க வைக்குது..
"இந்த உலகம் எவ்ளோ பெரியது அதே சமயம் எவ்ளோ சின்னது..  எதற்காக இதெல்லாம் நடக்குது?! உயிர்பிழைத்தல் தான் கொள்கை என்றால், அதுவும் தான் எதற்காக??

வேற்று கிரகத்தில் இருந்து தான் இங்கே வந்து ஒட்டிக் கொண்டோம் என்று மேலும் மேலும் வலியுறுத்திக் கொண்டு தான் போகிறார்கள்.. என்ன தான் நோலன், "mankind was born on earth but not meant to die here" னு சொன்னாலும், a --> b சாத்தியம் என்றால் b-->a ஏன் சாத்தியப்படாது??!

இவை எல்லாம் இருந்தும், மனதின் ஓரத்தில்,சில சமயம் மேலோங்கியும் நினைவுக்கு வருவது, இந்திய புராணங்களிலும் சாஸ்திரங்களும், (இன்னும் உலகத்தில் வேறு சில பழங்கதைகளிலும்) விண் வெளியில் நேரம் குறையும் என்று எவ்வாறு கூறி இருக்கிறார்கள்..? அந்த காலத்திலே வேலையின்றி கற்பனை செய்து கூறியிருக்கிறார்கள் என்று துளியும் நம்ப முடியவில்லை.!
மணாளனே மங்கையின் பாக்கியம் படம் தான் நினைவுக்கு வருகிறது..

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ சென்று விட்டேன்..! இதனாலேயே இன்டர்ஸ்டெல்லார் மிக பிடித்துப் போனது..

sadhu சொன்னாங்க, நோலன் எல்லா விஷயத்தையும் logicalஆ அப்ரோச் பன்னுவாருன்னு.. அதுவும் சரின்னு தான் படுது.. இந்த படத்துல, family sentiment, human emotionsலாம் அதிகப்படியா காண்பிச்சிருந்தாலும்,
It was "Gravity" which made me cry from the soul... "Interstellar" made me think & question even more...